புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1991 ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றார். இந்த கட்டிடம் மிகப் பழமையான நிலையில் உள்ளதால் அனைத்து வகுப்பறைகளும் காரை சுவர் பெயர்ந்து விழுந்து வருகிறது. இது தொடர்பாக பெற்றோர் பலமுறை கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை வகுப்பறைகள் சீரமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று பள்ளி துவங்கிய நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாய்க்கு தண்ணீர் பிடிக்க மாணவர்கள் சென்ற போது அதன் சுவர் திடீரென இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த மாணவ மாணவிகளை சபாநாயகர் திரு. செல்வம் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தொடர்ந்து விபத்து நடந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று பொதுப்பணித்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை அழைத்து பள்ளி கட்டிடம் வேறு ஏதேனும் சேதம் அடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து அப்படி சேதம் அடைந்திருந்தால் உடனடியாக விரைந்து அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.