புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், முகப்பு பகுதியில், புதியதாக 21 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி சிலை அமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதனையொட்டி மண் வழிபாடு புனித நீர் வழிபாடு, நலப்பதி வேள்வி, புதிய சிலைக்கு அருட்கண் திறப்பித்தல், சக்கரம் பதித்தல், காப்பு அணிவித்தல், வேள்வி சாலை நுழைவும், வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிவசுப்ரமணிய சுவாமிக்கு, புனித நீர் ஊற்றி தமிழில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., பிரமுகர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.