சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வழியாக புதுச்சேரிக்கு கார்டிலா என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசுக் கப்பல் நேற்று (ஜூலை 4) காலை புதுச்சேரிக்கு முதல்முறையாக வந்தது. இந்தச் சொகுசுக் கப்பலில் 1800 பேர் பயணம் செய்தனர்.
இதில் புதுச்சேரி கலாச்சாரத்தை தெரிந்துகொள்வதற்காக சொகுசுப் படகிலிருந்து சிறிய படகு மூலம் துறைமுகம் அழைத்து வரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் துறையின் செயலர் மணிகண்டன் பூங்கொத்துக் கொடுத்தும், தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி அனைவருக்கும் வெள்ளை நிறப் பட்டுத் துண்டு அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அவர்கள் சொகுசுப் பேருந்து மூலம் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் புதுச்சேரி சுற்றுலாத் தலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதுச்சேரி வந்த அவர்கள் அரபிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், ஆரோவில் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.