பெரம்பலூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் முக்கிய வீதிகளில் ஆங்காங்கே சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உரிய அறிவிப்புகளையும், எச்சரிக்கைகளையும், முன்னறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டாலும் சாலையோரக் கடையினரும், ஆக்கிரமிப்பாளர்களும் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை. இது குறித்து தொடர்ச்சியாக வரப்பெற்ற புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் இருந்து பள்ளிவாசல் தெரு, கே. கே நகர் மற்றும் பாலக்கரை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையின் இரு இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த கரும்பு ஜூஸ் கடைகள், பிரியாணி கடைகள், டிபன் சென்டர்கள் மற்றும் பழக்கடைகள் என சாலையோரக் கடைகள் மற்றும் வீடுகள் , வணிக வளாகங்களில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.