பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பேறுகால இறப்புக்கான காரணங்கள், அவற்றை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், எடை குறைந்த குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு செய்தார். பின்னர் நாள்தோறும் 175 க்கும் மேற்பட்ட புற நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் பேறுகால சிகிச்சைகளை சிறந்த முறையில் மேற்கொண்டதற்காக பெரம்பலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு. கே. மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. எம். கீதா, உதவி திட்ட மேலாளர் (தேசிய சுகாதார குழுமம்) மரு. கலைமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.