பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து நேற்று கிரேன் ஒன்று கல்பாடி பிரிவு சாலைக்கு புறப்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நெடுவாசல் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த மினி பஸ் மீது கிரேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்ததோடு, கண்ணாடி முற்றிலும் உடைந்து கீழே விழுந்தது. இதில் 4 பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான மினி பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.