சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு தலைமையில் (26. 07. 2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 15. 08. 2024 அன்று சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. நம் தாய்த்திரு நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களின் அளப்பரியா அர்ப்பணிப்பு மிக்க தேசப்பற்றை போற்றும் விதமாக அன்றைய நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பட்டியலை உரிய காலத்திற்குள் தயாரித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களிடம் வழங்க வேண்டும்.
காவல்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடந்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் கோகுல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.