பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் (04. 09. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தில், தற்போது 2, 287 எண்ணிக்கையிலான புத்தகங்கள் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 06 எண்ணிக்கையில் இணையதள வசதியுடன் கூடிய கணிணிகள் வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் எடுக்கும் வகையில் இணையதள வசதியுடன் அதிநவீன தொடுதிரை, குழந்தைகள் அமர்ந்து படிக்கும் வகையிலான பிரத்யேக இருக்கை மற்றும் மேசைகளும், இந்த அறிவுசார் மையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தேவையான புத்தகங்களும், தினசரி செய்தித்தாள்களும் அறிவுசார் மையத்தில் உள்ளதால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
இந்நிலையில் ஆட்சியர் கிரேஸ் அறிவுசார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளிடம் தற்போது உள்ள வசதிகள் போதுமானதாக உள்ளதா, மேலும் என்னென்ன வசதிகள் வேண்டும் என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் போட்டித்தேர்விற்கு பயன்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குறித்து பார்வையிட்டார்.