பெரம்பலூர் தீரன் நகர் எறைய சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வேலா கருணை இல்லத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு மற்றும் சேவை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ. 1, 200 மாதந்தோறும் வழங்கப்படுவது மற்றும் இக்காப்பகத்தில் காப்பாளர், சமையலர், தொழிற்கல்வி பயிற்றுநர், தன்னார்வலர்கள், ஓட்டுநர், பொறுப்பு அலுவலர், காப்பக காவலர்கள் ஆகியோர்களுக்கு அரசின் மூலமாக வழங்கப்படும் ஊதியம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் காப்பகத்தில் வழங்கப்படும் சேவைகள், உடல்நலம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்.
பின்னர், இம்மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்தம் 106 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகத்தில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள், பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். மேலும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த தங்கும் அறைகளை பார்வையிட்டு, படுக்கை அறையில் மெத்தைகள் மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், அறிவுறுத்தினார்.