பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று (29.03.2025) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். தொடக்கத்தில் அனைத்து மாடுபிடி வீரர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவப்பரிசோதனை முகாம் மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும் முகாம்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் பகுதிகளில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாடுபிடி வீரர்களும் வருவாய்த்துறை மூலமாக முறையாக பெயர் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாடுபிடி வீரர்களின் உடல் தகுதி குறித்து மருத்துவக்குழுவினர் முழு ஆய்வு செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.