பெரம்பலூர் அருகே டிராக்டர் மோதிய விபத்தில், சைக்கிள் ஓட்டிக் கொண்டு விளையாடிய 8 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கண்டன் மகன் தர்ஷன்(8). இவர் கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு விடுமுறை என்பதால், தர்ஷன் வீட்டு வாசலில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மங்களமேடு கிராமத்தைச் சேர்ந்த, மாரிமுத்து(37) என்பவர், அவரது டிராக்டரில், அந்த பகுதியில் உள்ள கிரஷரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு முனியப்பன் கோவில் நோக்கி சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் தர்ஷன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சிறுவன் தர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து, மாரிமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிய சிறுவன் டிராக்டரில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.