தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெரம்பலூர் (ம)அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 15. 11. 2024 அன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், நிகழ்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் (07. 11. 2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ள அரசு விழாவினை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகளை உரிய காலத்திற்குள் செய்ய வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுடைய துறைகளின் பயனாளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் வழங்கிட வேண்டும். பயனாளிகளை அழைத்து வருவதற்கான வாகன வசதிகள் , எந்தெந்த பகுதிகளில் இருந்து பயனாளிகள் அழைத்துவரப்பட உள்ளார்கள், எத்தனை பேருந்துகள் தேவைப்படும் என்பதை கலந்தாலோசித்து, பேருந்துக்கான பொறுப்பு அலுவலர்களை நியமித்து வட்டார போக்குரவத்துத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.