பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்க கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஹெக்டேர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு இருக்கிறது.
இதில் 61,000 ஹெக்டேர் மக்காச்சோளம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் மக்காச்சோளம், சின்ன, வெங்காயம், மரவள்ளி, நெல் ஆகிய சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையும் பயிர் காப்பீட்டுத் தொகையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களை கையில் ஏந்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.