பிரசித்தி பெற்ற பெரம்பலூர் அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயில். பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்டதால் சகோதரர்கள் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் திருத்தலம், வியாக்ரபாத முனிவர் பூஜித்து வழிபட்டது, அற்புத நந்தியாவட்டையை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம் என பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இத்திருத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவானது டிச. 31 ம் தேதி பகல் பத்து மணி முதல் தொடங்கி, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் மதன கோபால சுவாமி எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஜன. 9 ம் தேதி மோகினி அலங்காரத்தில் சேவை அளித்தார். இதனைத் தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியையொட்டி அருள்மிகு மதன கோபால சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தோடு எழுந்தருளி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா பக்தி கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்வில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.