பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் உள்ள பெரம்பலூர் சக்கரை ஆலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது
சர்க்கரை ஆலையில் உள்ள கருவிகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்கள் ஆலையை சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்கள் சர்க்கரை ஆலை அலுவலர்களுடன் ஆலை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலுவைத்தொகை, வழங்கப்படவேண்டிய தொகை உள்ளிட்ட வகைகளை விரிவாக ஆலோசனை மேற்கொண்டு அனைவரிடத்திலும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.. இன்று பெரம்பலூர் சர்க்கரை ஆலை ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. ஆய்வின் போது சர்க்கரை ஆலைகள் இயக்குநர் அன்பழகன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.