ஆட்டுக்கொல்லி நோய் என்பது, ஆடு வளர்ப்போருக்கு அதிக அளவில் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்நோய் Morbillivirus எனப்படும் வகையைச் சார்ந்த ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இந்நோயிலிருந்து கால்நடைகளை காத்திடும் பொருட்டு 04 மாதத்திற்கு மேல் வயதுடைய கருவுறா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு இத்தடுப்பூசியினை 11. 11. 2024 முதல் 30. 11. 2024 முடிய இலவசமாக கால்நடை மருந்தகங்களில் செலுத்தி பயன்பெறலாம். அதிக காய்ச்சல் (41 C) 3 முதல் 5 நாட்கள் நீடிக்கும், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல், கழிச்சல், இருமல், குட்டிகளில் அதிக அளவில் இறப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
ஆட்டுக் கொல்லி நோய் தொற்றிலிருந்து தங்களது வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை காத்திடும் பொருட்டு, தங்களது கிராமத்திற்கு கால்நடை மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட வரும்பொழுது தங்களது ஆடுகளுக்கு அடையாளவில்லை அணிவித்தும், அடையாளங்களை வழங்கி, குடும்ப அட்டை மருத்துவ குழுவினரிடம் வழங்கியும், ஆடு வளர்க்கும் விவசாயிகள் உரிய விபரம் அளித்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.