அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபிரதாப் மனைவி முத்தமிழ் செல்வி(35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், முத்தமிழ் செல்வி தனது குழந்தைகளுடன் மாமியார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கூட்டு குடும்பத்தில் இருக்கும், தங்களது பெயரினை நீக்கி, தனி குடும்பமாக புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார் இந்நிலையில் அந்த விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து முத்தமிழ் செல்வி அதே ஊரில் உள்ள நியாய விலை கடை விற்பனையாளரிடம் போனில் பேசியுள்ளார். அதற்கு அவர் பணம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். முத்தமிழ் செல்வி, இது தொடர்பாக மீண்டும் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தபோது அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பதிவு தபால் அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்த முத்தமிழ் செல்வி, குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் அதற்கு பணம் கொடுக்க வசதி இல்லை என்று கூறி, தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகளை கண்டித்து முழக்கமிட்டவாறு பிச்சை எடுத்த அவர் ஒரு கட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.