ஊட்டி, அரக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனவிலங்கு தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பேரார் பொம்மன் நகரை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி அஞ்சலை தேயிலை தோட்டத்தில் இலை பறிக்க சென்ற போது, வனவிலங்கு தாக்கி உயிரிழந்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், வனவிலங்கு தாக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இருப்பினும், ஒரு வாரமாகியும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் வனவிலங்கு தென்படவில்லை. இதனால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும், பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதிக்கு இலை பறிக்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு வாரமாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்காடு கிராம மக்கள் நேற்று (மார்ச் 17) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.