வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு அரசு நிவாரணத்தொகையாக ரூபாய் 50 ஆயிரம் முன் பணமாகவும், ரூபாய் 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும் வனத்துறை வழங்கியது
உதகை அருகேயுள்ள பார்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த், பகுதியில் வசித்துவரும் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த கேந்தோர் குட்டன் (40) என்பவர் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பாததால் கிராமமக்கள் பல இடத்தில் தேடி பார்த்தனர் அப்பாேது கிராமத்தின் எல்லையில் ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனவிலங்கு பாதி தின்ற நிலையில் கேந்தோர் குட்டன் உடல் கிடந்துள்ளது.
இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறைக்கு இப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த வனம் மற்றும் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது பிரேத பரிசோதனை அரங்கின் வளாகத்தில் தோடர் இன பழங்குடியின மக்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வனவிலங்குகள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு அரசு நிவாரணத்தொகையாக ரூபாய் 50 ஆயிரம் முன் பணமாகவும், ரூபாய் 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும் வனத்துறை சார்பில் அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது.