
கோவை: 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கோவை சின்னமேட்டுப்பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவை குடிமைப்பொருள் வழங்கல் துறை குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மோகன் ராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் சின்னமேட்டுப்பாளையம் - இடிகரை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த சந்திரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.