பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சாமியார் மலையில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 3 கி. மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் சிவபெருமான், முருகன், அம்மன் ஆகியோருக்கு தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் புத்தாண்டு நாளில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடைபெறும் வழக்கம். நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையில் பல்வேறு சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பூஜைகள் செய்து வழிபட்டனர். கோவில் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பல்வேறு சுவாமிகள் ஹிந்து மதம் மற்றும் இறைவனை வழிபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இவ்விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.