ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் குதிரைகள் மற்றும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆனால், இந்த சாலையில் கால்நடைகள் அதிகளவு சுற்றித்திரிவதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகரில் கால்நடைகள் மற்றும் குதிரைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், தொடர்ந்து ஊட்டி நகரில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் செல்லும் சேரிங்கிராஸ் சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் சாலையில் கால்நடைகள் வலம் வருவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்றும் ஊட்டி நகரின் முக்கிய சாலையான சேரிங்கிராஸ் சிக்னல் மற்றும் கமர்சியல் சாலையில் 5-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிந்தது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.