குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணி 6 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிவாக்கப் பணி நடைபெறும் இடங்களில் யானைகளின் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட வன அதிகாரி கவுதம், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் குறும்பாடி அருகே 2 இடங்களில் யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு இடங்களிலும் யானைகள் நடந்து செல்ல வச தியாக கட்டிடங்களை இடித்து மண் கொட்டி யானை வழி தடத்தை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. இந்த அறிவுரையின் பேரில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடங்களில் 11 மரங்கள் அபாயகரமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரங்கள் பணியின் போது கீழே விழும் அபாய நிலையில் உள்ளன. இவைகளை கணக்கெடுத்து எண் குறியீடு செய்யும் பணியில் வன ஊழியர்களும் வேட்டை தடுப்பு காவலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.