பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரம் பகுதிகளான மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது பலா பலாப்பழம் சீசன் என்பதால் பலாப்பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்து விடுகின்றன. கடந்த சில நாட்களாக இரண்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வப்போது அந்த யானைகள் பகல் நேரங்களிலும் குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று மாலை அய்யன்கொல்லி செல்லும் நெடுஞ்சாலையில் நின்ற காட்டுயானைகள் அங்கிருந்த மரக்கிளைகளை உடைத்து சாலையில் போடுவதும், இலைகளை பறித்து தின்பதுமாக இங்கும் அங்கும் உலவியது. இரு யானைகளும் அதே பகுதியில் அரைமணி நேரம் முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் அவை அங்கிருந்து நகர மறுத்தன. அதன்பின் தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர்- அய்யன்கொல்லி சாலையில் நின்ற காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.