கோத்தகிரி பகுதியில் கொய் மலர் சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் கொள்முதல் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோத்தகிரி பகுதியில் நிலவும் சீதோஷ்ண காலநிலை கொய் மலர்கள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் குடில்கள் அமைத்து கார்னேசன், ஜெர்பரா, லில்லியம், வாட்டர் லில்லி, ஓரியண்டல், ஈஸ்டாமோ, சின்ன பிராகன், டெல்பினியம் ஆகிய கொய் மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் கொய் மலர்கள் சாகுபடி அதிகரித்துள்ளது. இருப்பினும், தற்போது சந்தையில் கொய் மலர்களின் தேவை குறைவாக இருப்பதால், கொள்முதல் விலை குறைந்து வருகிறது. நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்வதற்காக கொய் மலர்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் அதன் தேவை எப்போதும் இருந்து வருவதுடன், கணிசமான கொள்முதல் விலையும் கிடைத்து வருகிறது. இந்த மலர் ஒன்று 100 முதல் 150 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீசன் இல்லாததால் மலர் ஒன்று 100 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் கவலை அடைந்துள்ளனர்.