நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் இன்று விரட்டினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வருவது வழக்கம். இந்நிலையில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்தது இந்த யானை கடந்த இரு வாரங்களாக காட்டேரி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்து கொண்டிருந்தது
இதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் கண்காணித்து வந்தனர். இந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் பிறந்தது என்பதால் இங்கு இருந்து செல்லாமல் சுற்றி சுற்றி வந்து வனத்துறையினருக்கு சவால் விட்டது.
லாஸ் நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானையை வனத்துறையினர் இரு புறங்களிலும் வாகனத்தை நிறுத்தி வாகன ஓட்டிகள் யானைக்கு இடையூறு செய்யாமல் சாலையை கடக்க செய்தனர். அப்போது தனியார் எஸ்டேட் சாலையில் யானை சென்ற போது எதிரே வந்த கியாஸ் சிலின்டர் வாகனத்தை அதன் ஓட்டுநர் பின்னோக்கி இயக்கினார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.