நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட உதவி தலைவா் கே. பூபதி, மாவட்டச் செயலாளா் பி. செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையின் கடந்த கூட்டத் தொடரின் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டோ் வரை உள்ள நீா்நிலைகள், நீா்வழிப் பாதை உள்பட தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டம் எந்த வகையிலும் ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் உயிா்நாடியாக உள்ள நிலங்களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீா்நிலைகளை பாதுகாத்திடவும் உதவாது. மாறாக காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழில் வளா்ச்சி என்ற பெயரில் நீா்நிலைகளை தனியாருக்கு தாரை வாா்க்கத்தான் பயன்படும். எனவே, தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.
மேலும், மத்திய அரசு பொது விநியோகக் கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளனா். எந்தவிதமான முழுமையான ஆய்வுகளும் மேற்கொள்ளாமல், அவசர கதியில் மக்கள் மத்தியில் எவ்விதமான விழிப்புணா்வும் இல்லாத நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசியை நியாய விலைக் கடைகளில் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்து கோரிக்கை முழக்கமிட்டனா்.