நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்ல சேந்தமங்கலம் முதல் காரவள்ளி அடிவாரம், ராசிபுரம் முதல் முள்ளுக்குறிச்சி அடிவாரம், தம்மம்பட்டி முதல் வேலிக்காடு அடிவாரம் வழியான சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், சேந்தமங்கலம் - காரவள்ளி சாலையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உள்கோட்டத்துக்கு உள்பட்ட காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூர் வழியாக காரவள்ளி அடிவாரம் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகலான இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தற்போது இந்த சாலை 8.480 கி.மீ. அளவில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 கி.மீ. நீளத்துக்கு சாலையை அகலப்படுத்த சிஆர்ஐடிபி 2024-25 திட்டத்தின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் கே.ஆர். திருகுணா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.