நாமக்கல் அடுத்த புதன் சந்தை மேம்பாலம் அருகே நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி சாலையோரம் நின்ற டேங்கர் லாரியில் இருந்து கசிந்த சோயா எண்ணெய்யை அப்பகுதி பொதுமக்கள் குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.
இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எண்ணெய் கொட்டியதால் போக்குவரத்தும் மாற்றப்பட்டு டேங்கர் லாரி அவிடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டேங்கர் லாரியானது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து 30, 000 லிட்டர் சோயா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி சென்றதும் அதிலிருந்த சோயா எண்ணெய் சுத்திகரிக்கப்படாமல் உள்ள நிலையில் அதனை பொதுமக்கள் பிடித்துச் சென்றதால் அதை சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அதனை பொதுமக்கள் யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும், அது சமையலுக்கு உகந்த என்னை இல்லை என்றும் அறிவுறுத்தி உள்ளது.