இராசிபுரத்தை அடுத்த தட்டான்குட்டை ஏரி அருகே வீடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப் பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.
தட்டான்குட்டை பகுதியில் பல்வேறு வீடுகளில் சாயப் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அருகாமையில் உள்ள தட்டான்குட்டை ஏரிக்கு குழாய் அமைத்து அதன் மூலம் கழிவு நீா் ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றமும், நிலத்தடி நீா் மாசும் அதிக அளவில் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். இது சம்பந்தமாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலமுறை சுற்றுச்சூழல் அதிகாரி, மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் காா்த்திகேயன், முரளி தலைமையில் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து, காவல் துறை, வருவாய்த் துறை உதவியுடன் சட்டவிரோதமாக செயல்பட்ட 3 சாயப் பட்டறைகளை இடித்து அப்புறப்படுத்தினா்.