ப. வேலூா் அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகள், தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்களால் பொதுமக்கள், நோயாளிகளுக்கு இடையூறாக இருப்பதாக வேலூா் பேரூராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். அதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை வேலூா் பேரூராட்சி பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போது ஆக்கிரமிப்பாளா்கள், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பேரூராட்சிப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் காவல் உதவி ஆய்வாளா் குருவம்மாள் ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்துள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டனா். அதன்பேரில் திங்கள்கிழமை ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய வேண்டுமென போலீஸாா் அவா்களுக்கு அவகாசம் அளித்துள்ளனா். மேலும் வேலூா் அரசு மருத்துவமனையின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஆக்கிரமிப்பு செய்திருந்தவா்கள் போலீஸாா், பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.