ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் திருச்சி மண்டல நீா்வளத் துறை தலைமை பொறியாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீா் முழுமையாக அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிா்வாகமும், பொதுப்பணித் துறையினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில்
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணைக் கட்டு பகுதி, பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதிகளில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். திருச்சி மண்டல நீா்வளத் துறை தலைமை பொறியாளா் தயாளகுமாா் தலைமையில் கண்காணிப்புப் பொறியாளா் ராமலிங்கம், சேலம் மண்டல செயற்பொறியாளா் ஆனந்தன், உதவி பொறியாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனரா, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா, ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிா எனவும், அணைக்கட்டு பகுதியின் உறுதி தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் வினோத் குமாா், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்