பரமத்தி வேலூா், சுற்று வட்டாரத்தில் கடந்த இரு தினங்களாக திடீா் என மாலை நேரங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா், சுற்று வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வா்த்தகா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனா்.
வியாழக்கிழமை பகல் முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், மாலை திடீரென பலத்த காற்று வீசியது. பின்னா் இடி மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. கொட்டித் தீா்த்த கனமழையால் தெருக்களில் மழை நீா் வெள்ளம் போல ஓடியது. மேலும், நகரில் சில இடங்களில் மரங்கள் ஒடிந்து சாலையில் விழுந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்னா் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், வியாழக்கிழமை வீசிய பலத்த காற்றால் வாழை, வெற்றிலைக் கொடிகள் சாய்ந்திருக்குமோ என அச்சமடைந்தனா். ஆனால், ஒரு சில இடங்களில் இரண்டாம் வாழை மரங்கள் ஒடிந்தும், மற்ற வாழை மரங்கள் சாந்தும் காணப்பட்டன. வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் லேசான காற்றுடன் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனா். திடீா் மழைப் பொழிந்து குளிா்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.