முதலைப்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் ரூ. 1. 54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி, நாமக்கல் முதலைப்பட்டி நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ச. உமா தலைமை வகித்தார். எம். பி, வி. எஸ். மாதேஸ்வரன், எம்எல்ஏ பெ. ராமலிங்கம், மேயர் து. கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலகத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மலைவாழ் மக்களுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்குக் கல்வி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால், அவர்களது குழந்தைகளுக்கு ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. உண்டு, உறைவிடப் பள்ளிகளில் குறைபாடுகள் இருந்தால் கண்டறிந்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. கொல்லிமலையில் ரூ. 1 கோடி மதிப்பில் இரவு வான் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது” என்றார்.