தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் சி. மணிமாறன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், தொகுதிப் பார்வையாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி, முனவர் ஜான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. பொன்னுசாமி (சேந்தமங்கலம்), பெ. ராமலிங்கம் (நாமக்கல்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் பங்கேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை வருவது தொடர்பாகவும், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்தும் பேசினார்.