நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றி, நன்செய் இடையாறு கிராமப் பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காவிரி நீர் வந்து சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது கூறியவர்கள், பரமத்தி-வேலூர் வட்டம், அனிச்சம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்த்தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நன்செய் இடையாறு கரையில் மிகப்பெரிய மணல் திட்டுகள் உருவாகியுள்ளன.
இதனால் அந்தக் கிராமத்தில் காவிரி ஆறு மற்றும் ராஜவாய்க்காலில் நீர் வருவது தடைபட்டு, அந்த நீர் முழுவதும் புகளூர் காவிரி கரை ஓரமாகச் சென்று விடுகிறது. மேலும், நன்செய் இடையாறு கிராமத்தின் ஓரத்தில் உள்ள இராஜவாய்க்காலில் வெங்கரை, பொத்தனூர், பரமத்தி-வேலூர் ஆகிய ஊர்களின் கழிவுநீர் கலந்து வருவதால், மணல் திட்டுக்கும் இராஜவாய்க்காலுக்கும் இடையே உள்ள குடிநீர் ஊற்றுக்கிணறுகளில் கழிவுநீர் கசிகிறது. இதனால் சுத்தமான நீர் கிடைப்பவில்லை என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.