மயிலாடுதுறை: பயிர் காப்பீடு காலஅவகாசம் நீட்டிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், சம்பா/ தாளடி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் கோரிக்கையின்படியும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் வேண்டுகோளினை ஏற்றும், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா/தாளடி நெற்பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவித்துள்ளது. இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில், காப்பீடு செய்ய வழிவகை இல்லாதபோதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் காப்பீட்டுக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பொதுசேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலம் தங்கள் விருப்பத்தின் பேரில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.