நாகை: ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகள் தொடக்கம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையார் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். துளசியாப்பட்டினத்தில் ஔவையார் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஔவையாருக்கு ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கிராமத்தினரே நடத்தி வந்த இந்த விழாவை பின்னர் ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என அனைவரும் இணைந்து நடத்தினர். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. இங்கு ஔவைக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில், ரூ. 18.95 கோடியில் மணிமண்டப கட்டுமானப் பணியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.