நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம், அறிவிழிமங்கலம், கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டான்தோப்பு, அத்திபடுகை, தென்னமரக்குடி, மருங்கூர், நெய்குப்பை, கண்ணமங்கலம், வேலங்குடி, எரவாஞ்சேரி, துறையூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பெரும்பாலும் விவசாய தொழில்களையே நம்பி உள்ளனர். மேலும் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்ப்பதன் மூலம் அதிலிருந்து கிடைக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு அன்றாடம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 13 கிராம மக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படும் பொழுது அருகில் கால்நடை மருத்துவமனை இல்லாமல் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமருகல் கால்நடை மருத்துவமனை அல்லது 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பயத்தங்குடி கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கால்நடைகள் வெகு தூரம் நடந்து செல்ல சிரமப்படுவதால் லோடு ஆட்டோக்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் கால்நடைகளை கொண்டு செல்ல ரூ. 500 வரை செலவு செய்ய வேண்டிய இருப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.