வேதாரண்யம் அருகே மியான்மர் நாட்டைச் சார்ந்த மீன்பிடி படகு (தெப்பம்) கரை ஒதுங்கி உள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிகுளம் கடற்கரை ஓரத்தில் இன்று (ஜனவரி 1) மியான்மர் நாட்டைச் சேர்ந்த மூங்கிலால் கட்டப்பட்ட மீன்பிடிக்கப் பயன்படுத்தக்கூடிய தெப்பம் கரை ஒதுங்கியுள்ளது. நீளம் 40 அடி, அகலம் 15 அடி, உயரம் 8 அடி கொண்டதாகவும் சுமார் 175 மூங்கில்களால் அமைக்கப்பட்டுள்ளது.
மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றவாறு 6 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது. சமைக்கப் பயன்படுத்தக்கூடிய அடுப்பு ஒன்றும் உள்ளது. மியான்மர் நாட்டில் கடற்கரையில் கட்டப்பட்ட படகு காற்றின் வேகத்தால் கயிறை அறுத்துக்கொண்டு வந்ததா? அல்லது இப்படகின் மூலம் வேறு யாரேனும் வந்தார்களா? என்ற கோணத்தில் கடலோர பாதுகாப்புக் குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு கடந்த டிசம்பர் 9ம் தேதி வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை பகுதியில் இதேபோன்று மியான்மர் நாட்டைச் சார்ந்த மீன்பிடி படகு (தெப்பம்) கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.