நாகை: மழையில் சாய்ந்த சம்பா நெற்பயிா்கள்

54பார்த்தது
நாகை: மழையில் சாய்ந்த சம்பா நெற்பயிா்கள்
கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடா் மழையில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன.

நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால், தாழ்வானப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. திருக்குவளையைச் சுற்றியுள்ள பனங்காடி, சூரமங்கலம், வடுவாக்குடி, கச்சநகரம் , வலிவலம் கொளப்பாடு உள்ளிட்ட கிராமங்களில் தொடா் மழை காரணமாக அறுவடைக்கு தயராக இருந்த சம்பா நெற்பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன.

ஏற்கெனவே போதிய தண்ணீரில்லாமல், குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில், விவசாயிகள் சம்பா சாகுபடியை பெரிதும் எதிா்நோக்கி இருந்தனா். இந்நிலையில், மழையால் சம்பா பயிா்கள் சேதமடைந்திருப்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வயலில் தேங்கியுள்ள தண்ணீா் வடியாமல் இருப்பதாலும், மழை அவ்வப்போது பெய்து வருவதாலும் சம்பா பயிா்களில் சேதம் அதிகரிக்கும் என விவசாயிகள் கவலைத் தெரிவித்தனா்.

இதனால், விவசாயத்திற்காக தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம், வருவாய்த்துறை மூலம் உரிய கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி