கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை பறவைகள் சரணாலயம் உலக புகழ் பெற்றது. சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வட துருவப் பகுதியில் நிலவும் கடும் குளிரை விரட்டுவதற்காக 274 வகை பறவைகள் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கில் வருகின்றன.
அதில் 120 வகை பறவைகள் நீர்ப்பறவைகள் ஆகும். நீர்ப்பறவைகளைக் கடந்த வாரம் கணக்கெடுத்த நிலையில் நிலப்பறவைகளை கணக்கெடுக்கும் பணி நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியும் மாதிரி கணக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் 10 குழுக்களாக பறவைகளை கணக்கெடுக்க திருச்சி நேஷனல் காலேஜ் மற்றும் பூம்புகார் கலைக் கல்லூரி மாணவர், மாணவிகள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
பழைய கலங்கரை விளக்கம், கடற்கரைப் பகுதி, ராமர் பாதம் என 10 பிரிவுகளில் கணக்கெடுக்கும் பணி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவர், மாணவிகள் ஆர்வமுடன் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.