மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜனவரி 2-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 68 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாகனங்கள் ஜனவரி 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலக வளாகத்தில் ஏலமிடப்படவுள்ளது.
இந்த வாகனங்களை ஜனவரி 1-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலக வளாகத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நுழைவுச் சீட்டு பெற்று பாா்வையிடலாம்.
காட்சிப்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளா்கள், தங்களின் வாகனத்தை பெற்றுக்கொள்ள அரசு நிா்ணயத்துள்ள தொகை மற்றும் அதற்குண்டான 18 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும். ஏலம் கேட்க விரும்புபவா்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5000 முன்பணமாக ஜனவரி 2-ஆம் தேதி காலை 7 மணிக்குள், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் செலுத்த வேண்டும்.