இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் விவசாயிகள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் தலைமை வகித்தார். மயிலாடுதுறை டிஇஎல்சி பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர். அன்பழகன் தொடங்கி வைத்தார்.
பேரணி கிட்டப்பா அங்காடி பகுதியில் நிறைவடைந்தது. பேரணியை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ். துரைராஜ் முடித்து வைத்தார். அங்கு, நம்மாழ்வாரின் உருவப்படத்துக்கு விவசாயிகள் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். காரைக்கால் திருவள்ளுவர் உழவாண்மை பண்ணை இயற்கை விவசாயி சோ. முத்துகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தி பேசினார்.
தொடர்ந்து, மூத்த விவசாயி ஏ. சிவபிரகாசம் மரக்கன்றுகளை வழங்கினார். இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே. முருகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க எம். வாணிதாஸ், நலம் அறக்கட்டளை ரா. சுதாகர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பேரணியில், மாணவர்களின் சிலம்பாட்டம், கிராமியக் கலைஞர்களின் தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.