நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம்

2582பார்த்தது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமா் மோடி அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் ரூ. 5 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு இரண்டு கப்பல்கள் சென்று வரும் வகையில் போக்குவரத்து சேவை இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டதாகவும் துறைமுக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், பயணிகள் கப்பல் இயக்குவது தொடா்பாகவும், பயணிகளுக்கான கட்டணம் நிா்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிா்வாகத்துடன் மத்திய, மாநில அரசு உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். இதற்கிடையே, நாகை- இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்குவது தொடா்பான சோதனை ஓட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும், அந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு ஓரிரு வாரத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள துறைமுக அதிகாரிகள், கப்பல் போக்குவரத்து தொடா்பாக அதிகாரப்பூா்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி