நாகை மாவட்டத்தில் முன்மாதிரி விருதுக்கு தகுதியான திருநங்கைகள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநங்கையா் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையருக்கான முன் மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெற திருநங்கைகள், அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உயிா் தரவு, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, சுயசரிதை தனியரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருது பெற்றிருப்பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விவர அறிக்கை, சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு, தலா 2 நகல்களை கையேட்டில் இணைத்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலத்தில் பிப். 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.