நாகூர் அருகே விமர்சையாக நடைபெற்ற தீமிதி திருவிழா: பால் காவடி பறவை காவடி அலகு காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றம்:
நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா கடந்த நான்காம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று அதி விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நாகூர் விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குடங்கள், அலகு காவடி, பறவை காவடி முக்கிய வீதிகள் வழியாக கோலாட்டத்துடன் கருமாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் 100க்கும் மேற்பட்ட விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து கருமாரியம்மனுக்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.