சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அரசியல் களத்திற்கு புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் இன்று ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநரைச் சந்தித்தது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக தன்னை உருவகப்படுத்தி கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி வெளியிட்டார்.
விஜய் வெளியிட்ட கடிதம் தீயாய் இணையத்தில் பரவி வரும் சூழலில், அவர் எழுதிய கடிதத்தை தவெக தொண்டர்கள் மக்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக கூறி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
அதற்கு கண்டனம் தெரிவித்து நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தினர் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர் சாலையில் அமர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.