நாகை மாவட்டம் திட்டச்சேரி புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது உஸ்மான் மகன் முகமது தெளபிக் (வயது 19). இவர் நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். திட்டச்சேரி புடவைகாரத் தெருவை சேர்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ் (வயது 13). இவர் காரைக்கால் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் நேற்று காலை திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரமலான் தொழுகையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை முகமது தௌபிக் ஓட்டி உள்ளார். மோட்டார் சைக்கிள் திட்டச்சேரி மெயின் ரோடு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் வந்த போது கட்டுப்பட்டை இழந்து சுவற்றின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தெளபிக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறுவன் முகமதுபாரிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் முகமது பாரிஸை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துள்ளதாக தெரிவித்தனர்.