நாகை – விழுப்புரம் நான்கு வழிச்சாலையில், சேவை சாலை இல்லாததால் மூன்று கிலோமீட்டர் சுற்றிவரும் நிலையில் நாகை மாவட்டம் பனங்குடி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே செல்ல முடியாமலும், சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமலும் இருந்து வந்தனர்.
இதனிடையே பனங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது சடலத்தை கிராம சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால் நான்கு வழிச்சாலைக்கு சேவை சாலை இல்லாததாலும், சுடுகாட்டுக்குச் செல்லும் சீரான பாதை அமையாததாலும், கிராம மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை பாடைக்கட்டி தூக்கி வந்து, பனங்குடி – சன்னாநல்லூர் சாலையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டதுடன், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் உடனடியாக ஜேசிபி வாகனங்கள் வரவைத்து தற்காலிக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
விரைவில் சேவை சாலை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.